என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்

செவ்வாய், 27 டிசம்பர், 2011

மைனர்


"தம்பி ஊருக்குப் புதுசா... எந்த ஊரு...?"  என்று கேட்டார் மைனர்.

"வாங்க அண்ணே! நமக்குச் சொந்த ஊரு திருச்சி பக்கமுங்க.  போன புதன்கிழமைதான் 

கடையைத் திறந்தேன். ஒரு தடவையாவது நீங்க அவசியம் நம்ம கடைக்கு விஜயம்

செய்யனும்..." என்றான் ஆறுமுகம்.

"வர்றேன்! வர்றேன்! அதைச் சொல்லிட்டுப் போகத்தானே வந்திருக்கேன். நாளைக்குக் காலைல சரியா ஒன்பது மணிக்கு வந்துடறேன். ஸீட்டைக் காலியா வச்சிரு. எனக்கு முடி வெட்டிட்டு அப்புறம் அடுத்தவனுக்குச் செய். என்ன, நான் சொல்றது புரியுதா...?" என்றார் மைனர்.

"நாளைக்கா...? நாளை செவ்வாய்க் கிழமை நம்ம கடைக்கு லீவு அண்ணே! புதன் கிழமை வாங்க..." என்றான் ஆறுமுகம்.

"யார்ரா இவன், சுத்த புரியாதவனா இருக்கானே! டேய் லோட்டா...! நம்மளைப் பத்தி இவனுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுடா!" - என்றவாறே புறப்பட்டுப் போனார் மைனர்.

"தம்பி... நம்ம ஊரு மைனர் சொன்னா சொன்னதுதான்... அவரை எதிர்த்துக்கிட்டு யாரும் இந்த ஊர்ல வாழ்ந்ததுமில்லே... வாழப்போறதும் இல்லே! மரியாதையா நாளைக்குக் காலைலே ஒன்பது மணிக்கெல்லாம் கடையைத் திறந்து எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சுரு... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... முடி வெட்டிட்டு தப்பித் தவறி மைனர் கிட்டே பணம் கிணம் கேட்டுடாதே... அப்புறம் உன் கடையே காலியாயிடும்!" என்றான்  லோட்டா என்று மைனரால் அழைக்கப்பட்ட பரமசிவம்.

றுநாள்...

செவ்வாய்க்கிழமைதான் என்றாலும் ஆறுமுகத்தின் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே உட்கார இடமில்லாமல் நிறைய பேர் வெளியே நின்றிருந்தார்கள்.

'இன்று எல்லோருக்கும் இலவசமாக முடி வெட்டப்படும்!
என்று எழுதி ஒரு பெரிய போர்டு கடைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்தது!

தனக்கு மட்டுமே ஸ்பெஷல் மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த மைனருக்கு

ஆறுமுகம் வைத்திருந்த போர்டும், கடையில் நின்றிருந்த கூட்டமும் அதிர்ச்சியைத் 

தந்தன!

"டேய்... லோட்டா...!" என்று ஆத்திரத்தோடு கத்தினார்.

"சொல்லுங்க அண்ணே..." என்று மைனர் எதிரில் பவ்யமாக நின்றான் லோட்டா.

"இப்படி எல்லாரும் பயந்து  பயந்து எனக்கு ஜால்ரா அடிச்சே என்னை எதுக்கும் உதவாத பயலா ஆக்கிட்டீங்கடா... நேத்திக்கு வந்தவன் என் முகத்துல கரியைப் பூசிட்டாண்டா..." என்று சொன்ன மைனரின் குரலில் வருத்தம்.

"யாரு அண்ணே அவன்...?"

"நம்ம ஊர்ல புதுசா சலூன் திறந்திருக்கானே ஆறுமுகம்... அவன்தான்... அவன் எனக்கு நல்லா பாடம் கற்பிச்சுட்டான்... இந்த ஊர்லே எனக்கு இனிமே மரியாதை இல்லாம செய்துட்டான்... நான் இந்த ஊரைவிட்டே போயிடப் போறேன்... போற இடத்துலே புது மனுஷனா வாழப் போறேன்..."

- சொன்ன மைனரை வியப்போடு பார்த்தான் லோட்டா என்ற பரமசிவம்.

( ஆனந்தவிகடனில் வெளியான என் முதல் கதை - 30.10.88 இதழ் ) 


புதன், 21 டிசம்பர், 2011

கை (ஒரு பக்கக் கதை)



ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தார் புரோக்கர் கண்ணுசாமி.

இன்னும் சிறிது நேரத்தில் பெற்றோர்களுடன் பெண் பார்க்க வரப் போகிறான் முரளி.

இந்தத் தடவையாவது முரளியின் அம்மாவுக்குப் பெண் பிடிக்க  வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பித்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.

இப்போது முரளி பார்க்கப் போவது நாலாவது பெண்ணை.  ஏற்கனவே பார்த்துவிட்டு வந்த மூன்று பெண்களுக்கும் கை நீளம் என்று சொல்லி அவனின் அம்மா நிராகரித்துவிட்டாள்.

அம்மா பார்த்து சரி என்றால்தான் மேலே பேசுவேன் என்று அவனின் அப்பாவும் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

வெறுத்துப் போய்விட்டார் கண்ணுசாமி.

'எதை வைத்து, பார்த்த பெண்களுக்கெல்லாம் கை நீளம் என்று முரளியின் அம்மா திருட்டுப் பட்டம் சூட்டுகிறாள்?'

இந்தத் தடவை பெண் பார்த்துவிட்டு வந்ததும் எப்படியும் இதைப் பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.  

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

முரளியின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு, "என் மகன் வடபழனி கோயில்ல பூக்கடை வச்சிருக்கான். அவன் அங்கே, இங்கே போய்வரும் போதெல்லாம் அவனுக்குப் பொண்டாட்டியா வர்றவதான் கடையை கவனிச்சுக்கணும். பூ வியாபாரத்துல நீளமான கையால முழம் போட்டு வித்தா எங்களுக்கு நஷ்டம். உங்க பெண்ணுக்கு கை சின்னது. அதான் எனக்குப் பிடிச்சிருக்கு" என்றாள் முரளியின் அம்மா.

"அடடே...இதுதானா விஷயம்!" என்று தலையைச் சொரிந்து கொண்டார் கண்ணுசாமி.  

("குங்குமம் அக்.28 - 3 நவ. '94 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)